யாரிடமாவது போய் நான் அமெரிக்கால இருக்கேன் என்று ஃப்லிம் காட்ட நினைத்தால், எம் புள்ளையும் அங்கனதா இருக்கான், போறப்போ இந்த இட்லி பொடிய அவங்கிட்ட குடுத்துடு என்று சொல்லும் காலம் இது. இது தெரிந்துதான் நான் முடிந்தவரை அமெரிக்கா கதைக்கே போவது இல்லை. அப்படியே மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கே நம்மை விட அதிக விஷயம் தெரிந்து நம்ம மானம் தான் போகும்.
அமெரிக்கா எல்லாம் எப்படி இருக்கு. உங்க வீட்ல எல்லாம் தண்ணி பிரச்சனை எதுவும் இல்லையே ? என்று எல்லாம் கேட்டிருந்த காலம் போய், சாக்கர்ல நீ எந்த டீம ஃபாலோ பண்ற என்கிற ரீதியாகத்தான் இப்பொழுதெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.
துணிக்கடையில் நான் வாயை மூடிக்கொண்டு இருந்தாலும், நீ அங்க சேலை எல்லாம் கட்டுவ தான? என்று ஆர்வக்கோளாறில் ஒருவர் கேட்டு வைக்க, உடனே கடைக்காரர் மெதுவாக யு.எஸ்-ங்களா ? என்றார். நான் ம்ம்,, என்று மட்டும் சிரித்து வைத்தேன். உடனே அவர் சாஃப்ட்வேர்-ங்களா ? என்று கேட்க, நூத்தியோராம் முறையாக, இல்லைங்க சயின்ஸ்-லதான் இருக்கேன் என்று நொந்தேன்.
ப்ஃளோரிடாவில் ஃப்ளைட் ஏறியது முதல் "சோ, விச் ப்ளாட்ஃபார்ம், டு யு வர்க்" என்று நான் பார்க்கும் இந்தியர்கள் எல்லாம் கேட்டு என் வயித்தெரிச்சலை கொட்டிக்கொண்டார்கள். முதன் முறையாக ஒருவர் என்னிடம் இந்த கேள்வியை கேட்ட போது, ப்ளாட்ஃபார்ம்-லயா நானா? என்று காமெடி செந்தில் போல் நான் கோபித்துதான் கொண்டேன். சில நாளில் அது "ஆட்டோகிராஃப்" படத்தில், நாயகியை சுத்தி "செந்தில், செந்தில்" என்று சுத்துவதை போல், " நீங்க சாஃப்ட்வேரா, நீங்க சாஃப்ட்வேரா?? " என்று எல்லோருடைய கேள்வியும் என்னை மிரட்டி , " இல்ல ! நா சாஃப்ட்வேர் இல்ல!! நா சாஃப்ட்வேர் இல்ல !!" என்று நான் தூக்கத்தில் பிதற்றும் அளவு ஆனது.
"ஏன் இப்படி சயின்ஸ கட்டிட்டு அழற, சாஃப்ட்வேர்-க்கு வந்துடு ரெண்டு வருஷத்துல செட்டில் ஆயிரலாம்", என்றெல்லாம் சொன்னபோது சாஃப்ட்வேராவது, அண்டர்வேராவது, நான் வந்து கத்துட்டு உன் வேலைய செய்வேன், நீ வந்து, என் வேலைய செய்ய முடியுமா? என்றெல்லாம் கேட்ட திமிர், இப்பொழுது மெதுவாக குறைந்து எந்த வேரை தின்றால் பித்தம் தெரியும் என்ற அளவில் ஆனது. மேற்படிப்பு படித்து முடிக்கும் காலத்தில் ஒரு வேளை, வேலை கிடைக்காட்டி, எதுக்கும் இருக்கட்டிமே என்று தோழியின் சாஃப்ட்வேர் கணவரிடம் ரெஸ்யுமே அனுப்பி வைக்க, சாஃப்ட்வேர்க்கு இப்படித்தான் மாத்தனும் என்று அதை மாற்றி திருப்பி அனுப்பி வைத்தார். அதில் என் பேர், முகவரி தவிர எல்லாம் பொய்யாய் இருக்க, இந்த பொய்க்கெல்லாம் என்னிடம் தைரியம் இல்லை என்று கும்பிடு போட்டேன். இப்போது எல்லா வெட்கத்தையும் விட்டு ஊரோடு ஒத்துவாழ் என்று கிளம்பிவிடலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.